புதுடெல்லி
ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
உலக கோப்பை ஆக்கி
10–வது ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 15–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலகின் முன்னணி ஜூனியர் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள.
‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான ஜெர்மனி (1982, 1985, 1989, 1993, 2009), பாகிஸ்தான் (1979 சாம்பியன்), பெல்ஜியம், எகிப்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா (1997 சாம்பியன்), ஸ்பெயின், அர்ஜென்டினா (2005 சாம்பியன்), பிரான்ஸ் அணிகளும், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, கொரியா, இந்தியா (2001 சாம்பியன்), கனடா அணிகளும், ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ரொக்கப்பரிசு
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியில் சிறந்த வீரருக்கு ரூ.1 லட்சமும், அதிக கோல் அடிக்கும் வீரருக்கு ரூ.50 ஆயிரமும், கால் இறுதிப்போட்டியில் இருந்து ஆட்டநாயகன் விருது பெறும் வீரருக்கு தலா ரூ.12 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
இந்தியா–நெதர்லாந்து மோதல்
இந்த போட்டியில் பங்கேற்கும் பல்வேறு அணிகளில் சீனியர் அணியில் இடம் பிடித்த வீரர்களும் உள்ளனர். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய சீனியர் அணியில் விளையாடும் மன்பிரீத் சிங், கோதாஜித்சிங் ஆகியோர் ஜூனியர் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் கொரியா–கனடா (பகல் 12 மணி), ஆஸ்திரேலியா–அர்ஜென்டினா (பகல் 2 மணி), ஜெர்மனி–பெல்ஜியம் (பிற்பகல் 2.30 மணி), நியூசிலாந்து–மலேசியா (மாலை 4 மணி), ஸ்பெயின்–பிரான்ஸ் (மாலை 5 மணி), பாகிஸ்தான்–எகிப்து (மாலை 6 மணி), இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா (இரவு 7.30 மணி), இந்தியா–நெதர்லாந்து (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பத்ரா குற்றச்சாட்டு
இதற்கிடையில் ஆக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் நரிந்தர் பத்ரா அளித்த ஒரு பேட்டியில், ‘டெல்லியில் ஆக்கி போட்டி நடத்துவது என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. போதிய பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கப்படுவது கிடையாது. அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் உலக ஆக்கி லீக் தான் டெல்லியில் நடைபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும். ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தான் அணியினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் படி உள்துறை அமைச்சகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment