படித்துவிட்டு வேலை தேடும் இளைஞராக விக்ரம் பிரபு
யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம், ‘இவன் வேற மாதிரி.’ இந்த படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:–
‘‘இவன் வேற மாதிரி படத்தில், விக்ரம் பிரபு படித்துவிட்டு வேலை தேடும் இளைஞராக வருகிறார். அவருக்கு ஜோடியாக வரும் சுரபி, கல்லூரி மாணவியாக வருகிறார். வில்லனாக வம்சியும், அவருடைய அண்ணனாக–மந்திரி வேடத்தில் ஹரிராஜும், போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமும் நடித்துள்ளனர்.
இவர்கள் ஐந்து பேருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. படத்தில், எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும். படுபயங்கரமான 4 சண்டை காட்சிகளும், ஒரு கார்–மோட்டார் சைக்கிள் துரத்தல் காட்சியும் இடம்பெறுகின்றன. கார்–பைக் துரத்தல் காட்சியை மட்டும் 6 நாட்களாக படமாக்கினோம்.
சத்யா இசையமைத்து இருக்கிறார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோணி ஸ்குருவாலா, சித்தார்த் ராய் கபூர், என்.சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.’’
என்ன கதை?
படத்தின் கதையை பற்றி டைரக்டர் சரவணன் சொல்கிறார்:–
‘‘பொதுவாக ஒருவனை இவன் வேற மாதிரி என்றால்–எதிர்மறையாக கூறுவதற்கு மட்டுமே சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் நாயகன் வேறு மாதிரி. அதாவது நல்லவன்.
எங்காவது தவறு நடந்தால், அதற்கு யாராவது ஒருவர்தான் காரணம் என்பார்கள். நமக்கு இதில் என்ன தொடர்பு, பொறுப்பு இருக்கிறது? என்று யாரும் யோசிப்பதில்லை. அப்படி யோசிப்பவன்தான், நாயகன். அதனால்தான் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சுரபி, டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஒரு மாதம் வசன பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. வில்லன் வம்சி, ‘தடையறத் தாக்க’ படத்தில் மிரட்டியவர். போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். இந்த நான்கு கதாபாத்திரங்களை மையமாக வைத்தே கதை பயணிக்கிறது.
சென்னை நகரை பின்னணியாக கொண்ட கதை என்பதால் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. சில காட்சிகள் மட்டும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது.’’
No comments:
Post a Comment