புதுடெல்லி
மத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதில் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது.
மத வன்முறை தடுப்பு மசோதா
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை வருகிற 20–ந்தேதி வரை 12 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இதில் மத வன்முறை தடுப்பு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. நாட்டில் மத ரீதியாக நடைபெறும் மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தது.
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
ஆனால் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நரேந்திரமோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்–மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓட்டு வங்கி மசோதா
மத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, இந்த மசோதா பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரானது என்று கூறி இருக்கிறது.
மத வன்முறை தடுப்பு மசோதா மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக கூறியுள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பின்னரே இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
மாநிலங்களின் உரிமையை பறிப்பதை சமாஜ்வாடி ஒரு போதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறினார்.
இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா யோசனை தெரிவித்து இருக்கிறார்.
பணிந்தது
இத்தகைய எதிர்ப்புகள் காரணமாக, மத்திய அரசு பணிந்தது. வரைவு மசோதாவில் திருத்தங்கள் செய்ய முன்வந்தது. முந்தைய மசோதாவில், ‘கலவரம் ஏற்பட்டால் பெரும்பான்மை சமூகத்தினரே பொறுப்பு’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், எல்லா மதத்தினருக்கும் நடுநிலையை கடைபிடிக்கும் வகையில், இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுகள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் சட்டப்பிரிவு கைவிடப்பட்டுள்ளது.
அதாவது, எந்த மாநிலத்திலாவது மத கலவரம் நடந்தால், கலவரத்தை ஒடுக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாகவே துணை ராணுவப்படைகளை அனுப்பலாம் என்று முந்தைய மசோதாவில் கூறப்பட்டு இருந்தது.
அதிகாரம்
ஆனால், புதிய திருத்தத்தின்படி, மத கலவரத்தை ஒடுக்க மத்திய அரசின் உதவி தேவை என்று சம்பந்தப்பட்ட மாநில அரசு கருதினால், படைகளை அனுப்ப மத்திய அரசின் உதவியை கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், வரைவு மசோதாவில் உள்ள இதர அம்சங்கள் வருமாறு:–
மத வன்முறையின்போது, கடமை தவறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தின்போது, மாநில அரசு அதிகாரிகள் செயல்பட தவறினாலோ, அவர்களின் மெத்தனத்தால் நிலைமை மோசமானாலோ அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.
மத கலவரத்தை தூண்டுவோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்ட மத வன்முறைக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு நிதிஉதவி அளிப்போருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். கடமை தவறிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டுவரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
கலவரத்தில் கொல்லப்படும் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சமும், கற்பழிப்புக்கு ரூ.5 லட்சமும், இதர பாலியல் குற்றங்களுக்கு 4 லட்சமும், நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், பகுதி அளவுக்கு ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், கொடுங்காயத்துக்கு ரூ.2 லட்சமும், ஆள்கடத்தலுக்கு ரூ.2 லட்சமும், மனநிலை துன்புறுத்தலுக்கு ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.
ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை
ராணுவ அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாத ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடரப்படும். மாவட்ட நீதிபதியோ அல்லது போலீஸ் கமிஷனரோ தங்கள் பகுதி ஏதாவது ஒன்றில், நிறைய குற்றங்கள் நடப்பதாக அறிந்தால், அந்த பகுதியை பதற்றமானதாக அறிவிக்கலாம். முதலில், 60 நாட்களுக்கு ‘பதற்றமானது’ என அறிவித்து, பின்னர், மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.
ஒருவர் தானாகவோ, மற்றவர்களுடன் சேர்ந்தோ ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மத வன்முறை வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment