சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பெற்ற சி.பி.ஐ. அதிகாரியை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாட்டரி வாங்கினார்
சென்னை தடா வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் வக்கீல் எம்.துரைசெல்வன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. போலீசாரால் பேரறிவாளன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
ராஜீவ்காந்தியை கொல்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டுடன் இணைப்பதற்கு தேவைப்பட்ட பாட்டரிகளை பேரறிவாளன்தான் வாங்கிக்கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
பதிவு செய்யப்படாத வார்த்தைகள்
இந்த கொலை வழக்கில் சி.பி.ஐ. சூப்பிரண்டு தியாகராஜன், வழக்கின் சாட்சியங்களையும், குற்றம்சாட்டப்பட்டோரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்யும் அதிகாரியாக செயல்பட்டார்.
சமீபத்தில் தியாகராஜன் கூறிய கருத்து, கடந்த நவம்பர் 25–ந்தேதி பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. அதில், ‘‘அந்த பாட்டரிகளை எதற்காக கேட்டார்கள் என்பது தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியிருந்தார். ஆனால் அந்த வாசகத்தை அவரது வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை’’ என்று கூறப்பட்டு இருந்தது.
உண்மைத்தன்மை
இந்த வார்த்தைகளை பார்க்கும்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பின்னணி சதித்திட்டத்தில் பேரறிவாளனுக்கு சம்பந்தம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே அவர் விடுதலை செய்யப்பட தகுதியானவர்.
அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. கோர்ட்டுக்கு வெளியே தியாகராஜன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது. ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு இது என்பதால், தியாகராஜனின் வாக்குமூலத்தை பதிவு செய்து, அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க வேண்டும்.
சம்மன் அளிக்க வேண்டும்
செய்யாத தவறுக்காக மரண தண்டனையை அனுபவிக்கக்கூடாது. தியாகராஜனின் இந்த கருத்து, ஒட்டுமொத்த விசாரணை மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரது வாக்குமூலமும் சரியாகத்தான் பதிவானதா? என்பது தற்போது ஒவ்வொரு இந்தியனுக்கும் எழுந்துள்ள சந்தேகமாகும்.
எனவே தியாகராஜனுக்கு சம்மன் அனுப்பி, பத்திரிகையில் அவரது பேச்சு குறித்து வந்த செய்தித்தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment