பெண் வழக்குரைஞரின் பாலியல் புகார் விவகாரத்தில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஏ.கே. கங்குலியை அந்தப் பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் குறிப்பைப் பெற்று உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாமா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்கும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதியின் கருத்தை மத்திய உள்துறை வியாழக்கிழமை கேட்டுள்ளது.
இதையடுத்து, ஓரிரு தினங்களில் குலாம் இ. வாகனவதி கருத்து தெரிவித்ததும் குடியரசுத் தலைவரின் குறிப்பைப் பெறுவது குறித்து மத்திய அமைச்சரவை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏ.கே. கங்குலி இருந்தபோது, பயிற்சியில் ஈடுபட்ட தன்னிடம் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பெண் வழக்குரைஞர் ஒருவர் புகார் கூறியிருந்தார்.
அது குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவை தலைமை நீதிபதி பி. சதாசிவம் அறிவித்தார். ஆனால், கடந்த மார்ச் மாதமே நீதிபதி பதவியில் இருந்து கங்குலி ஓய்வு பெற்று, தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருப்பதால் இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வரவில்லை' என்று உச்ச நீதிமன்ற குழு கூறியது.
இதையடுத்து, கங்குலியை நீக்க வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதை மத்திய உள்துறை பரிசீலனைக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பி வைத்து கருத்து கேட்டார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்த மனுவை மத்திய சட்டத் துறைக்கு உள்துறை அனுப்பி வைத்துள்ளது.
சட்டம் சொல்வது என்ன?: மனித உரிமைகள் ஆணைய தலைவரைத் தன்னிச்சையாக ஓர் அரசால் நீக்க முடியாது. அந்த நபர் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுவதாகக் கருதினால், அவரைக் குடியரசுத் தலைவர் நீக்க முடியும்; அல்லது அந்த நபரை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளும் அடிப்படையில் நீக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே கங்குலி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment