அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவயானி கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், டிஒய்எப்ஐ,எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணியாகச் சென்றனர்.
அவர்கள் லிண்ட்சே தெருவில் சென்றபோது அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி திடீரென மறியல் செய்ய முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பேகம்பேட் பகுதியில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் எதிரே தேவயானி கைதை கண்டித்து இடதுசாரிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் "அமெரிக்கா ஒரு இனவெறி பிடித்த நாடு 'என்ற வாசக அட்டைகளை ஏந்தி இருந்தனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
தேவயானி கைதை கண்டித்து தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதிரே பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
No comments:
Post a Comment