20.12.13

பேரிடர் மேலாண்மை: ஆலோசிக்க உத்தரகண்ட் குழு ஒடிஸா வருகை

கஞ்சாம் மாவட்டத்தில் பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உத்தரகண்ட மாநிலத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை பார்வையிட்டது. பேரிடர் மேலாண்மை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அக் குழுவினர் கேட்டறிந்தனர்.
உத்தரகண்ட் பேரிடர் மீட்புத் திட்ட மேலாளர் சைலேஷ் பகுலி தலைமையிலான இக் குழுவில் உலக வங்கி, ஐ.நா. வளர்ச்சித் திட்டப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். கனமனா, மட்டிகல்லா ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் புயல் பாதுகாப்பு குடில்களுக்கும் அக் குழு சென்று பார்வையிட்டது.
புயலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் நிலைமையை மாவட்ட நிர்வாகம் எப்படி சமாளித்தது என்பதை அறிந்துகொள்ள குழுவினர் அதிக ஆர்வம் காட்டினர்.
இயற்கைச் சீற்றம் ஏற்படுவதற்கு முன் மாவட்ட அளவில் பேரிடர் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டதையும் அவற்றின் பணிகள் குறித்தும் குழுவினர் கேட்டறிந்தனர் என்று மாவட்ட உதவி ஆட்சியர் மகேந்திர பாண்டா தெரிவித்தார்.
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட சமாளிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒடிஸா பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் புவனேசுவரத்தில் புதன்கிழமை அக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
பாய்லின் புயலின்போது உயிர்ச் சேதத்தை தடுப்பதற்கு மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அக் குழு பாராட்டியது. கடற்கரையில் இருந்து 5 கிமீ தூரம் வரை வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதால்தான் உயிர்ச் சேதம் குறைக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் பாய்லின் புயலால் 13 பேரும் அதற்குப் பின் ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பேரும் ஆக மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment