தில்லியில் மறு தேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தில்லி பிரதேச மூத்த தலைவர் ஹர்ஷ வர்தன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லியில் மறு தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 43 முதல் 48 இடங்கள் வரை கிடைக்கும் என்று எங்கள் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகையால், பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் கட்சிகூட மறு தேர்தலில் 13 முதல் 18 இடங்கள் வரை பெறக்கூடும்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு 15 இடங்கள்கூட கிடைக்காது என்று எங்கள் கட்சி கணித்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியிடம் பாஜக 22 இடங்களில் நேரடியாகத் தோற்றது. இந்த இடங்களில் நாங்கள் 1.86 சதவீத வாக்குகள் இடைவெளியில்தான் தோற்றோம். அதனால், அத் தொகுதிகளில் மறுபடியும் தீவிர கவனம் செலுத்தி ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிப்போம். ஒரு தேர்தலில் தோற்றுவிட்டதற்காக தேசியக் கட்சியான காங்கிரஸின் அத்தியாயம் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது.
ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய போராட்ட இயக்கத்தால்தான் ஆம் ஆத்மி கட்சி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. அண்ணா ஹசாரேவின் ஆசி அக் கட்சிக்கு இருப்பது போன்ற தோற்றம் உருவானது. கவர்ச்சியான அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஆம் ஆத்மி கட்சி ஏமாற்றியுள்ளது. அக் கட்சி போட்டியில் இல்லாமல் இருந்திருந்தால் பாஜக மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றிருக்கும். அக் கட்சியைப் பற்றி நாங்கள் சரியாக கணிக்கவில்லை. ஆனால், இப்போது கணித்துவைத்துள்ளோம். மறு தேர்தலில் அக் கட்சியைத் தோற்கடிப்போம்.
ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் கருத்துகளைக் கேட்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்துக்கே இழுக்கானது. மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள் முதலில் மதிக்க வேண்டும். அதற்கேற்ப அவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றார் ஹர்ஷ வர்தன்.
எலி-பூனை விளையாட்டு: ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து பாடங்களைக் கற்றிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து குறித்து ஹர்ஷ வர்தன் கூறியதாவது:
"காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சி உடன்பாடு வைத்திருந்தது. அது காங்கிரஸ் கட்சியின் மற்றொரு அணிதான். தில்லியில் ஆட்சி அமைப்பது குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு ஆம் ஆத்மி கட்சி "எலி - பூனை விளையாட்டு' போல ஆடி வருகிறது. வேஷம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் அக் கட்சியினர் இதுபோன்ற விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர். ஆட்சி அமைக்க அக் கட்சிக்கு விருப்பம் இல்லை. அதனால், உடனடியாக மறு தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநரை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தில்லிவாசிகளை முட்டாளாக்கி வருகின்றன' என்றார்.
No comments:
Post a Comment