கர்நாடகத்தில் நில அபகரிப்பில் ஈடுபடுவோரை அந்த மாநில முதல்வர் சித்தராமையா பாதுகாக்க முயற்சிப்பதாக, முன்னாள் பிரதமர் தேவ கெளடா குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
பெங்களூரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சித்தராமையா எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆக்கிரமிப்பாளர்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறார்.
ஆக்கிரமிப்பில் இருந்து அரசு நிலங்களை மீட்டு, அவற்றை விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும். இதன்மூலம், திரட்டப்படும் வருவாயைக் கொண்டு ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கலாம். நில ஆக்கிரமிப்பாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது.
பெங்களூரு கெம்பே கெüடா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கூடுதல் நிலம் அளிக்கப்படும் என்று, மாநில அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் தந்திரமாகும்.
லோக்பால் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதை வரவேற்கிறேன். இந்தச் சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் தேவ கெளடா.
No comments:
Post a Comment