20.12.13

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் ரசாயன கலவை பூசும் பணி தொடக்கம்

உப்பு படிமம் அகற்றும் பணிக்கு தயாராகியுள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயில். (உள்படம்) ரசாயன கலவை பூசும் தொழிலாளர்கள்.

கடல் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் மீது படிந்திருக்கும் உப்பு படிவங்களை அகற்றுவதற்கான ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைச்சிறந்த சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது. பல்லவ மன்னர்களின் ஆட்சியையும் சிற்பக்கலை ஆர்வத்தையும் பறைசாற்றும் வகையில் அவர்களின் கலைத்திறத்தால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் காண்போரை கவர்ந்து வருகிறது. இதில் முக்கியமான இடத்தை கடற்கரை கோயில் பெற்று விளங்குகிறது.
யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதனச் சின்னமாக இக்கோயில் திகழ்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியின் ராட்சத அலைகள் தாக்கியபோதும் இக்கோயில் சேதமின்றி தப்பியது. இக்கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் மூன்று புறமும் கடல் உள்புகும் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றி பாறாங்கற்கள் கொட்டப்பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் கடல் உட்புகாமல் கோயிலை பாதுகாத்து வருகின்றன.
எனினும் உப்பு கலந்து கடல் காற்றினால் கோயிலும், சிற்பங்களும் பாதிப்புகுள்ளாகி வருகிறது. உப்பு அரித்த இடங்களில் சிறுசிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதித்து வருவதை தடுக்கவும், பாதிப்பினின்று காக்கவும் தொல் பொருள் ஆராய்ச்சித் துறை ஆண்டுதோறும் ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது.
தற்போது இத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுநர்கள் இப்பணியினை மேற்கொண்டுள்ளனர். முதலில் கோயில் முழுவதும் சுத்தமான நீரில் ரசாயன கலவை கலக்கப்பட்டு பூசப்படுகிறது. அதன்பின் பாறை துளைகளில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகான் பாலிமர் ரசாயனக் கலவை கலந்து பூசப்படுகிறது.
உப்பு படிமங்கள் படிந்திருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 15 நாள்கள் வரை இக்கலவை பூசப்பட்டு உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும். இப்பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment