1.12.13

"அதிகாரப் பகிர்வுக்கான 13-ஆவது சட்டத் திருத்தம்: இலங்கையின் சீர்குலைப்பு முயற்சியை முறியடிப்போம்'



இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை சட்டத் திருத்தத்தை சீர்குலைக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்தியா முறியடிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அதனை நிறுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதன் விளைவாக போரின் முடிவில் சுமார் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மத்திய அரசின் முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் செவி சாய்த்திருந்தால் இப்போது பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்.
ராஜதந்திரம்: இலங்கைப் பிரச்னையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் சம உரிமையைப் பெற முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யவதற்காக, இந்தியாவின் முயற்சியால் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன. சிங்களத்துக்கு இணையாக தமிழுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து, மாகாண அரசுகளை ஏற்படுத்துவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது ஆகியவை இந்த சட்டத் திருத்தத்தில் முக்கியமானவை.
இதனை அமல்படுத்துவோம் என முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே முதல் இப்போதைய அதிபர் ராஜபட்ச வரை அனைவரும் உறுதி அளித்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ராஜபட்ச உறுதி அளித்தார். ஆனால், இதனை இலங்கை அரசு அமல்படுத்தவில்லை.
13-ஆவது சட்டத் திருத்தத்தைச் சீர்குலைக்க அந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தடுத்து சட்டத் திருத்தத்தைக் காப்பாற்ற வேண்டும்; அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு ராஜ தந்திரத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில இலங்கையின் முயற்சிகளை உறுதியாக முறியடிப்போம். இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு ஒருநாளும் கைவிடாது.
விசாரணை நடத்த வேண்டும்: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஓர் ஆணையத்தை இலங்கை அரசு அமைத்தது. ஆனால், தொடர் நடவடிக்கை இல்லை.
இனப்படுகொலை குறித்து உலக நாடுகள் ஒப்புக் கொள்ளும் அளவில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்காக உலக அரங்கில் குரல் கொடுப்போம். இலங்கை அரசையும் வற்புறுத்துவோம் என்றார் ப. சிதம்பரம்.
மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதமர் விரைவில் இலங்கை பயணம்
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க, பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது; அதேசமயத்தில், மாநாட்டைப் புறக்கணிக்கக் கூடாது என ஆரம்பம் முதலே நான் வலியுறுத்தினேன்.
பிரதமர் பங்கேற்காமல் வெளியுறவுத் துறை அமைச்சரை பங்கேற்கச் செய்தது ராஜதந்திர நடவடிக்கை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அதுபோல சல்மான் குர்ஷித் செய்திருக்க முடியாது. அவர் பிரதமர் அல்ல.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் விரைவில் யாழ்ப்பாணம் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திப்பார். இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதையே எதிர்த்த பாஜகவால் அங்குள்ள தமிழர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்றார் ப. சிதம்பரம்.

No comments:

Post a Comment