1.12.13

இந்திய அணி முன்கூட்டியே தென் ஆப்பிரிக்கா பயணம்

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை முன்கூட்டியே தென் ஆப்பிரிக்கா அனுப்பி வைக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள சூழலை வீரர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இந்திய அணி டிசம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.
டிசம்பர் 5, 8, 11 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. டிசம்பர் 18 மற்றும் 30-ம் தேதிகளில் டெஸ்ட் போட்டிகள் தொடங்கும். இதில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் டிசம்பர் 1-ம் தேதி இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளனர். ஒருநாள் அணியில் இடம்பெறாமல் டெஸ்ட் அணியில் மட்டும் வாய்ப்பு பெற்ற மூத்த வீரர் ஜாகீர் கான், புஜாரா, முரளி விஜய், பிரக்யான் ஓஜா மற்றும் ரித்திமான் சகா ஆகியோர், ஒருநாள் தொடர் முடிந்த பின் தென் ஆப்பிரிக்கா செல்வதாக இருந்தது.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் ஆசிய துணைக் கண்டத்தில் உள்ள ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அத்துடன் அங்குள்ள சூழலும் வித்தியாசமானவை. எனவே, டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள எஞ்சிய வீரர்களை, திட்டமிட்டதற்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் சனிக்கிழமை விடுத்த அறிக்கையில், "ஜாகீர் கான் மட்டுமல்லாது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்களையும் முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வீரர்கள் அங்குள்ள சூழலை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அங்கு ஹோட்டல் அறைகள் கிடைப்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment