1.12.13

தருண் தேஜ்பால் கைது



பாலியல் புகாரில் சிக்கிய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது. இதையடுத்து, கோவாவில் தேஜ்பாலை அந்த மாநில குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக பெண் நிருபர் அளித்த புகாரின் அடிப்படையில் தேஜ்பாலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்டை பிறப்பிக்க வேண்டும் என்று கோவா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
அதே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தேஜ்பாலும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தேஜ்பாலை சனிக்கிழமை காலை 10 மணி வரை கைது செய்யாமல் இருக்க கோவா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், கோவா குற்றப் பிரிவு போலீஸார் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜராகிய தேஜ்பாலிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலையும் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு தேஜ்பால் சென்றார். ஆனால் அவரிடம் விசாரணை நடத்தப்படாத காரணத்தால் பத்து நிமிடங்கள் காத்திருந்து திரும்பினார்.
ஒத்துழைப்பு அளிப்பார்: தேஜ்பாலின் முன்ஜாமீன் மனு மீது சனிக்கிழமை அவரது வழக்குரைஞர் கீதா லூத்ரா ஆஜராகி வாதிட்டார். அப்போது, "இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணை முடியும் வரை கோவாவில் தருண் தேஜ்பால் தங்கியிருப்பார். அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் தயாராக உள்ளார். பெண் நிருபர் தற்போது தங்கியுள்ள மும்பைக்கு தேஜ்பால் செல்லமாட்டார். இந்த வழக்கின் சாட்சிகளையோ, ஆதாரங்களையோ அவர் சிதைத்துவிட மாட்டார். போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்' என்று உறுதியளித்தார்.
முன்ஜாமீன் கூடாது: இதற்கு கோவா அரசுத் தரப்பு வழக்குரைஞர் சரேஷ் லோட்லிகர் எதிர்ப்பு தெரிவித்து முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் தேஜ்பாலை போலீஸ் காவலில் எடுத்து முறையாக விசாரிக்க வேண்டியது அவசியம். பச்சோந்தி அவ்வப்போது நிறம் மாற்றிக் கொள்வதைப் போல தேஜ்பால் அவ்வப்போது தான் கூறிய வார்த்தைகளை மாற்றிக் கூறி வருகிறார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ பதிவு, தேஜ்பால் பாலியல் குற்றம் புரிந்தார் என்பதை உறுதி செய்கிறது.
கோவா போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், நீதிமன்றத்தின் தாற்காலிக தடை உத்தரவு பெற்ற பின்னரே தேஜ்பால், கோவா போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.
புகார் அளித்த பெண் நிருபரின் குடும்பத்தினரை நிர்பந்தம் செய்ய அவர் ஏற்கெனவே முயன்றுள்ளார். இதனால் வழக்கின் சாட்சிகளை அவர் நிர்பந்திக்க நேரிடும். ஆகையால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இருவரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி அனுஜா பிரபுதேசாய், வழக்கின் உத்தரவை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
முன்ஜாமீன் நிராகரிப்பு: அதன் பின்னர் இரவு 8 மணியளவில் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் 25 பக்கத் தீர்ப்பை அளித்தார். அதில்,"பாதிக்கப்பட்ட பெண் நிருபரின் வாக்குமூலம், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் ஆகியவை தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதை உணர்த்துகின்றன. அந்தப் பெண்ணுக்கு குருவாகவும், தகப்பனார் நிலையிலும் இருக்கக்கூடிய தேஜ்பால், அப்பெண்ணின் கண்ணியத்தை சிதைத்திருப்பதுடன், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அப்பெண்ணின் நம்பிக்கையை உடைத்து, உடல் ரீதியாகவும் வன்முறை நிகழ்த்தியிருக்கிறார். ஆகையால் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது' என்று நீதிபதி தெரிவித்தார்.
தன் மீதான வழக்கு அரசியல் ரீதியில் ஜோடிக்கப்பட்டது என்றும் பாலியல் பலாத்கார சட்டப் பிரிவுகள் கொடுமையானவை என்றும் தேஜ்பாலின் வழக்குரைஞர் எடுத்துரைத்த வாதத்தையும் நீதிபதி நிராகரித்தார்.
நீதிபதியின் உத்தரவை அடுத்து தேஜ்பால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்து சென்றனர். இதனிடையே, தேஜ்பாலின் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி கிரண் பேடி, கோவா நீதிமன்றத்தின் தீர்ப்பு தேஜ்பால் போன்ற நபர்களுக்கு மிக வலுவான எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.
தேஜ்பால் மீது
கருப்புக் கொடி வீச்சு: ஒருவர் கைது
கோவா நீதிமன்றத்தில் ஆஜரான தேஜ்பால் மீது கருப்புக் கொடியை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையின்போது தேஜ்பால் தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை மாலை 4.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தேஜ்பால் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.
அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே கருப்புக் கொடியுடன் நின்று கொண்டிருந்த நபர், கொடியைத் தூக்கி தேஜ்பால் மீது வீசினார்.
ஆனால், தேஜ்பால் காரில் ஏறிவிட்டதால், அவர் மீது படவில்லை. கைது செய்யப்பட்ட அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மங்கள் சௌத்ரி என்பதும் தற்போது அவர் கோவாவில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment