1.12.13

சட்டப்பேரவைத் தேர்தல்: ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் முதல்வர் அசோக் கெலாட், மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே உள்பட 2,087 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 1.92 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 47,223 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்தத் தேர்தலையொட்டி பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
சுரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் மெக்வால் திடீர் மறைவை அடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜோத்பூர் மாவட்டம், சர்தார்புரா தொகுதியில் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க., ராஜபுதன வேட்பாளர் ஷாம்புசிங் கெடாஸார் என்பவரை களத்தில் இறக்கியுள்ளது.
முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. வேட்பாளருமான வசுந்தர ராஜே சிந்தியாவும் ஜாலராபதான் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சந்திரவாட் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் போட்டி சற்று கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. 200 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் சார்பில் 195 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 38 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 23 பேர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 16 பேர், இதர கட்சிகள் சார்பில் 666 பேர், சுயேச்சைகள் 758 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 166 பெண் வேட்பாளர்களும் அடங்குவர்.
சட்டப்பேரவைத் தலைவர் தீபேந்திர சிங் ஷேக்ஸா, ஸ்ரீமாதவ்பூர் தொகுதியிலும், தேசிய மகளிர் கமிஷன் தலைவர் மம்தா சர்மா, புண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ன பூனியா, சாதுல்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமலா பாஸ்வாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
மொத்தம் உள்ள 47,223 வாக்குச்சாவடிகளில் 10,793 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 1,19,272 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வசுந்தரா ராஜே மீது புகார்: இதற்கிடையே, பா.ஜ.க. வேட்பாளர் வசுந்தர ராஜே, சமூக வலைதளம் மூலம் தேர்தல் நடத்தை விதியை மீறி மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சத்தியேந்திர சிங் ராகவ், தேர்தல் ஆணையத்திடம் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment