1.12.13

பயங்கரவாத சதித் திட்டம்: பெங்களூருவில் மருத்துவர் கைது

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு சதித் திட்டம் தீட்டிய மருத்துவரை பெங்களூருவில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கைது செய்தனர்.
கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பத்திரிகையாளர்களைக் கொலை செய்து, இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக மருத்துவர் இம்ரான் அகமது (எ) இம்மு பாயை பெங்களூரு கனகபுரா சாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 2012, ஆகஸ்ட் 29-ஆம் தேதி பெங்களூரு ஹுப்ளியில் 12 பேரையும், செப்டம்பர் 2-ஆம் தேதி மேலும் ஒரு நபரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேரை வளைகுடா நாடுகளில் பதுக்கியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், துபையில் குடியேறி தலைமறைவாக இருந்த இம்ரான் அகமது, போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூருவுக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பெங்களூரு நீதிமன்றத்தில் இம்ரான் அகமதுவை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய தேசியப் புலனாய்வு அமைப்பினர், தீவிர விசாரணைக்காக ஹைதராபாதுக்கு சனிக்கிழமை அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களை திரட்டியதாகவும், திருடு போன வாகனங்களைச் சேகரித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

No comments:

Post a Comment