3.12.13

2 ஜி வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்களால் 1, 029 மனுக்கள் தாக்கல்: நீதிபதி எரிச்சல்

சர்ச்சைக்குரிய 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்து வருவதாக சிபிஐ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஒ.பி. சைனி திங்கள்கிழமை கோபத்துடன் கண்டித்தார்.
இந்த வழக்கில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் கோரி, மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, தனியார் நிறுவன அதிகாரி ராஜீவ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி சைனி திங்கள்கிழமை தள்ளுபடி செய்தார். பின்னர் கோபத்துடன் நீதிபதி கூறியதாவது:
"இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை 1, 029 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சந்தோலியா இதுவரை 37 மனுக்களையும், ராஜீவ் அகர்வால் 84 மனுக்களையும், ஆசிஃப் பல்வா 71 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். இது போன்று தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு மனு மீதும் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் சட்டப்படி ஆராய்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதன் மூலம் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைக்கு தேவையில்லாத ஆவணங்களையும், சாட்சியங்களையும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்டு மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே மனுத் தாக்கல் செய்கின்றனர்.
 இதன் மூலம் லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களால் வழக்கு விசாரணையை மூழ்கடிக்கப் பார்க்கின்றார்கள். இந்தச் செயல் அனுமதிக்கப் படமாட்டாது.
இது போன்ற மனுக்களை இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் ஜனவரி 20ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment