3.12.13

அரசின் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்துங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்



அரசின் நலத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  மாற்றுத் திறனாளிகள் தினத்தை (டிச. 3) முன்னிட்டு, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
  மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவுகூர்ந்திடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
     மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்றிடவேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான கருவிகள், சான்றிதழ்கள், உதவித்தொகை வழங்குதல், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சையும் ஆலோசனைகளும் வழங்குதல் ஆகியவற்றுடன் கல்வியும் அளிக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  மாற்றுத் திறனாளிகளுக்கென மாநில ஆதார வள மையம், அதிகரிக்கப்பட்ட மாதாந்திர உணவு மானியம், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள், வெளியூர் பஸ்களில் 75 சதவீத பஸ் பயணச் சலுகை, குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
     மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது, பார்வையற்றோருக்காக வாசிப்பவர்களுக்கு இரு மடங்காகவும், தேர்வு எழுத உதவுபவர்களுக்கு ரூ.250 ஆகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டது, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலால் இயங்கும் மூன்று சக்கர மோட்டர் வாகனங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தியது, பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு எளிதில் பணிநியமனம் கிடைத்திட தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது போன்ற எண்ணற்ற தனித்தன்மையான திட்டங்களுக்கு மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி உத்தரவிட்டுள்ளேன்.
      மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியமைக்காக இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு முழுமையான முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து நலத் திட்டங்களையும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment