3.12.13

மே 4-இல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும். அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசு கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. இந்த 15 சதவீத இடங்களில் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுபோல் 2014-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2014 மே 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.
இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுபவராகவோ அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவோ வேண்டும். 17 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
கடைசி தேதி:நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அத்தாட்சியை 2014 ஜனவரி 10-ம் தேதி ஆன்-லைனில் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் ரூ. 1,000 அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான அத்தாட்சியை 2014 பிப்ரவரி 5-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
ஒரே தாள்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு 180 கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, www.cbse.gov.in  மற்றும் www.aimpt.nic.in  ஆகிய இணையதளங்களை தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment