13.12.13

தெலங்கானா மசோதா மீது முடிவெடுக்க ஆந்திர சட்டப் பேரவைக்கு 6 வார அவகாசம்


தனித் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க ஆந்திர சட்டப் பேரவைக்கு 6 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு மசோதாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, ஆந்திர சட்டப் பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனித் தெலங்கானா வரைவு மசோதா ஆந்திர சட்டப் பேரவை மற்றும் பேரவைத் தலைவர் என்.மனோகரின் அலுவலகத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தை பிரித்து தனித் தெலங்கானா உருவாக்குவதற்கான மசோதா சட்ட ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான முதல்வர் கிரண்குமார் ரெட்டி, அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஆந்திரத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவையே அவர் எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த மசோதா தொடர்பாக சட்டப் பேரவையில் எடுக்கப்படும் முடிவு எதுவாக இருந்தாலும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட நடவடிக்கையை நாடாளுமன்றம் முன்னெடுத்துச் செல்லும் என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
திக்விஜய் சிங் ஆலோசனை: இதனிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இரண்டு நாள் பயணமாக ஆந்திரத்துக்கு வந்துள்ளார்.
ஆந்திரப் பிரிவினைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்களை அவர் சந்தித்து வருகிறார்.

No comments:

Post a Comment