13.12.13

லோக்பால் மசோதா: மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல்


ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பது எங்களின் இதயப்பூர்வமான விருப்பமாகும். இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் அந்த மசோதாவை நாங்கள் பட்டியலிட்டிருப்பதே அதை உணர்த்தும்.
லோக்பால் உள்ளிட்ட முக்கிய மதோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுவது சரியல்ல.
மாற்றுக் கட்சிகளில் முக்கியமான தலைவர்களாக விளங்கும் இதுபோன்ற சில நண்பர்கள், மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். அதை நான் அடியோடு மறுக்கிறேன். உண்மை வேறு மாதிரியாக உள்ளது. எங்களுக்குப் போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
நாடாளுமன்றத்தில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு தரப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் ஆளுங்கட்சிக்கு மட்டுமே பொறுப்பு இருப்பதாகக் காட்ட அவர்கள் (எதிர்க்கட்சியினர்) முயற்சிக்கின்றனர் என்றார் ஹரீஷ் ராவத்.
லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி சமூக சேவகர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மசோதாவில் திருத்தம் வேண்டும்- பாஜக: இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, லோக்பால், தெலங்கானா தனிமாநிலம் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு விரும்பவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் மேலும் கூறுகையில், ""நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கால அளவைத் குறைத்து அதன் மூலம் லோக்பால் மசோதா கொண்டுவரப்படாமல் தடுக்க அரசு முயற்சிக்கிறது.
ஆனால் இந்த மசோதா தாமதமின்றி அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி (பாஜக) ஆர்வமாக உள்ளது. லோக்பால் மசோதா தொடர்பாக மாநிலங்களவைத் தேர்வுக்குழு சில திருத்தங்களைப் பரிந்துரைத்தது. இந்தத் திருத்தங்களுடன் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மசோதாவை பாஜக ஆதரிக்கும்'' என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment