13.12.13

"ஜனநாயகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு'


ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே, மத்திய அரசு ஜனநாயகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை ஜனநாயகத்தை வஞ்சிப்பதாக உள்ளது.
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்வரை நான் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்ட நிலையிலும் அதன் நிகழ்ச்சி நிரலில் லோக்பால் மசோதா இடம் பெறவில்லை.
இது என்னையும், இந்த நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
இப்படி ஏமாற்றியதால்தான் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸýக்கு மக்கள் பாடம் புகட்டினார்கள்.
தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸýக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அண்ணா ஹசாரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""நாடாளுமன்றம் அமளியின்றி அமைதியாக நடைபெறும்வரை லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது கடினம். அனுபவம் நிறைந்த அண்ணா ஹசாரேவுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் நன்றாகவே தெரிந்திருக்கும். எனவே, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று அரசு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹசாரேவுடன் ஆம் ஆத்மி தலைவர்கள் சந்திப்பு
வலிமையான ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அண்ணா ஹசாரேயை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட 6 முக்கிய பிரமுகர்கள், ராலேகான் சித்தியில் வியாழக்கிழமை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் பொது மக்களிடையே பேசிய விஸ்வாஸ், அண்ணா ஹசாரேயுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு கருத்து வேறுபாடு ஏதும் கிடையாதென்றும், தங்கள் கட்சிக்கு நிரந்தர ஊக்கமளிக்கும் சக்தியாக அவர் திகழ்கிறார் என்றும் தெரிவித்தார். முன்னதாக ஹசாரேவைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த கேஜரிவால், உடல்நலக்குறைவு காரணமாக, ராலேகான் சித்தி பயணத்தை ரத்து செய்து விட்டார்.
திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு: இதனிடையே, லோக்பால் மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரக் ஓ பிரையன், இதனைத் தெரிவித்தார். அதேசமயம், லோக் ஆயுக்த நீதிமன்றங்களை அமைக்கவும், அதனைத் தொடர்ந்து செயல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment