13.12.13

தில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க மறுப்பு


தில்லியில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்த பிறகு, ராஜ்பவனில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளிக்கிறார் ஹர்ஷ வர்தன்.

இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து, பாஜகவுக்கு அடுத்தபடியாக 28 இடங்கள் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரும் சனிக்கிழமை (டிசம்பர் 14) ஆலோசிக்க வரும்படி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் ஆட்சி அமைக்க வருமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விடுத்த அழைப்பை ஏற்க பா.ஜ.க. மறுத்துவிட்டது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள் பணியாற்றவோ அல்லது மறுதேர்தலைச் சந்திக்கவோ தயாராக இருக்கிறோம்' என்று நஜீப் ஜங்கிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவில், பாஜகவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. இந் நிலையில், ஆட்சி அமைக்க 36 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆளுங்கட்சியால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
இதையடுத்து, எம்எல்ஏக்களை ஈர்க்க குதிரை பேரத்தில் ஈடுபட மாட்டோம் என பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பகிரங்கமாக அறிவித்தன. ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை உறுப்பினர் ஆதரவு தர முன்வந்தாலும் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால், தேர்தல் முடிந்து ஒரு வாரம் கடந்த பிறகும், தில்லியில் தொங்கு சட்டப்பேரவை நிலை நீடித்து வருகிறது.
இந் நிலையில், "ஆட்சி அமைக்க பாஜகவோ, ஆம் ஆத்மி கட்சியோ முன்வந்தால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று எட்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறினார். ஆனால், "எந்தக் கட்சியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டோமோ, அதன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விரும்பவில்லை' என்று பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைகளும் தெளிவுபடுத்தின.
தில்லி சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் 17-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளை துணைநிலை ஆளுநர் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கும்படி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டிருந்தார்.
இந் நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்தனை அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வரும்படி நஜீப் ஜங் புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். ஆனால், "சத்தீஸ்கர் மாநில முதல்வராக ரமண் சிங் பதவி ஏற்கும் விழாவையொட்டி ராய்ப்பூர் வந்து விட்டதால் வியாழக்கிழமை மாலையில் தில்லி வருகிறேன்' என்று ஹர்ஷ வர்தன் நஜீப் ஜங்கிடம் கூறினார்.
அதன்படி, தில்லி வந்த ஹர்ஷ வர்தன் நஜீப் ஜங்கை அவரது மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தில்லியில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஹர்ஷ வர்தனிடம் விளக்கிய நஜீப் ஜங், "எக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத போது முதலில் ஆட்சி அமைத்து விட்டு பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை அடைய முயற்சி மேற்கொள்ளுங்கள். மற்ற கட்சிகளின் ஆதரவையும் கோருங்கள்' என்று யோசனை தெரிவித்தார்.
ஆனால், "பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 36 இடங்கள் பாஜகவிடம் கிடையாது. கூட்டணிக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேச்சை உறுப்பினரைச் சேர்த்தாலும் 33 இடங்கள் பலம்தான் பாஜகவுக்கு இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆட்சி அமைத்து விட்டுப் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் சட்டப்பேரவையில் ஒரு தர்மசங்கடமான நிலைமையை எதிர்கொள்ள பாஜக தயாராக இல்லை' என்று ஹர்ஷ வர்தன், நஜீப் ஜங்கிடம் கூறினார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஹர்ஷ வர்தன் கூறியது:
"தில்லியில் அரசு அமைப்பது குறித்து துணைநிலை ஆளுநர் என்னுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைக்க வரும்படி எழுத்துப்பூர்வமாக அவர் கடிதம் அளித்தார். இத்தகைய சூழ்நிலையில் பாஜக மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்த தில்லி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியில் அரசு அமைத்து விட்டு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி துணைநிலை ஆளுநர் கூறினார்.
ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிற கட்சிகளைக் கலைத்து அதன் உறுப்பினர்களை ஈர்க்கவோ, கொள்கைக்கு விரோதமாக மாற்று சிந்தனை கொண்ட கட்சியிடம் (காங்கிரஸ்) ஆதரவு கேட்கவோ பாஜக விரும்பவில்லை. எனவே, அடுத்த நிலையில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முன்வந்தால்கூட எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள் சேவை செய்ய பாஜக தயாராக இருக்கிறது. பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்பதை ஆம் ஆத்மியும் தெளிவுபடுத்தி விட்டதாக அறிகிறேன். எனவே, அக் கட்சிக்கு பாஜக ஆதரவு தருவது தொடர்பான கேள்வியே எழவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் கட்சி மேலிடத்துடன் ஆலோசித்த பிறகே பாஜக ஒரு முடிவுக்கு வந்துள்ளது' என்றார் ஹர்ஷ வர்தன்.

No comments:

Post a Comment