13.12.13

ஓரினச் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: ஏமாற்றமளிக்கிறது - காங்கிரஸ்; நிலை பின்னர் அறிவிக்கப்படும் - பாஜக


இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

"இந்த விவகாரத்தில் தங்களது கட்சியின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும்' என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சோனியா: இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படுபவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் உரிமையுடன் வாழ நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
சுதந்திரமாகவும், விருப்பத்துடனும் வாழ்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது' என்று கூறியுள்ளார்.
ராகுல்: இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இது போன்ற விவகாரங்களை தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டவையாக நான் கருதுகிறேன். ஆகையால், அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.
இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சரியானது' என்று கூறினார்.
உடனடி நடவடிக்கை: "சட்டப்படி ஓரினச் சேர்க்கை குற்றம்' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், "நாடாளுமன்றத்தின் மூலமோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலமோ நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த இரண்டு வழிமுறைகளில் உடனடி பலன்கிடைக்கும் வழியை மத்திய அரசு கையாளும்' என்று கூறினார்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், "ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது நாட்டை பல நூற்றாண்டுகளுக்கு பின்தள்ளிவிட்டது. இந்தத் தீர்ப்பு அளிக்கப்படும் முன்பு சமுதாயத்தின் தற்போதைய நிலைப்பாடு கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு அளித்திருந்தது என்று அவர் கூறினார்.
சுஷ்மா ஸ்வராஜ்: இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதில், அரசு தனது நிலையை தெரிவித்த பின்பே எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.
இந்த விவகாரத்தில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.
ஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடாளுமன்றத்திலும் வியாழக்கிழமை எதிரொலித்தது.

No comments:

Post a Comment