5.12.13

பொங்கல்: சிறப்பு பஸ்களை நிறுத்த இடம் தேடும் அதிகாரிகள்

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பஸ்களை நிறுத்த மாற்று இடத்தை தொடர்ந்து தேடி வருவதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இடத்தை தேர்வு செய்ய முடியாமல் திண்டாடி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது.
திபாவளி பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் 8,350 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியது. சென்னையிலிருந்து மட்டும் 4,300 பஸ்கள் இயக்கப்பட்டன. தினமும் 600 முதல் 1,000 பஸ்கள் அளவுக்கு கூடுதலாக இயக்கப்பட்டன.
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது, கூடுதல் சிறப்பு பஸ்களும் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளி வருவதற்கே ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதன் காரணமாக, இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சிறப்பு பஸ்கள், பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கோயம்பேடு மார்க்கெட் லாரி ஷெட்டில் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவு தீர்வு கிடைத்தபோதும், குறித்த நேரத்தில் பஸ்கள் உள்ளே வரமுடியாமல் போனதால் முன்பதிவு செய்த பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்களை கோயம்பேடு மார்க்கெட் லாரி ஷெட்டில் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், பொங்கல் பண்டிகைக்காக காய்கறிகள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை சாதாரண நாள்களில் வருகின்ற கூட்டத்தைப் போல் பல மடங்கு அதிகரிக்கும். மேலும், இந்த காய்கறி லோடுகளை ஏற்றிக்கொண்டு அதிகபட்சம் 1,000 லாரிகள் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்.
இந்த நிலையில், சிறப்பு பஸ்களும் கோயம்பேடு லாரி ஷெட்டில் நிறுத்தப்படுமானால் மார்க்கெட்டில் மட்டுமல்லாமல் கோயம்பேடு பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வியாபாரமும் பாதிக்கப்படும். எனவே, பஸ்களை நிறுத்த மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மதுரவாயல் அருகே இடம்: இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியது:
பெங்கல் பண்டிகையின்போது சிறப்பு பஸ்களை நிறுத்துவதற்கான இடம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பின்புறம் சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான பெரிய இடம் உள்ளது.
ஆனால், அந்த இடத்தை பெரும் அளவில் மணல் நிரப்பி தயார் செய்ய வேண்டும். அது சாத்தியமாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்து, ஏராளமான பஸ்களை நிறுத்தி இயக்க முடியும் என உதவி பொறியாளர்கள் சிலர் ஆலோசனை தெரிவிக்கின்றனர். உயர் அதிகாரிகள் இந்த இடம் குறித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment