5.12.13

ராஜபட்ச தம்பியுடன் உறவாடுவதா? மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்



இலங்கைத் தமிழர்களின் நிலைக்காக உலகம் முழுவதும் வருந்தும்போது இந்திய அரசு மட்டும் ராஜபட்சவின் தம்பியை அழைத்து ரகசியமாக உறவாடி மகிழ்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எத்தனை வேண்டுகோள்கள், கடிதங்கள், கண்டனங்கள் விடுத்தபோதிலும் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் கொடுமை நீங்கவில்லை.
தமிழக மீனவர்கள் இருவரை நீதிமன்றத்திலிருந்து கைவிலங்கிட்டு அழைத்து வரும் காட்சி, கடந்த 2-ஆம் தேதி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற பிரான்ஸ் நாட்டு தொண்டு அமைப்பைச் சேர்ந்த 16 தமிழர்கள், 1 முஸ்லிம் என 17 பேரை நிற்க வைத்து சுட்டுக் கொன்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. இதற்காக பிரான்ஸ் நாடு வருந்துகிறது. தமிழர்களின் நிலை குறித்து மனிதநேயம் கொண்ட அனைவரும் வருந்துகிறார்கள்.
ஆனால், இதற்காக கண்டனம் தெரிவிக்க வேண்டிய இந்திய அரசோ, இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியை ரகசியமாக அழைத்து கைகுலுக்கி உறவாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எது உண்மை?: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக நகரப் பொதுச்செயலாளர் க. முருகன் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேரை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆனால் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தீவிரவாதி போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் முருகனை கொன்றதை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் இவர்கள் கடந்த 2-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட நீதிபதியிடம், செய்யாத குற்றங்களைச் செய்யச் சொல்லி மிரட்டினார்கள் என்று கூறியுள்ளனர். போலீஸார் சொல்வதற்கும், பக்ருதீன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. இதில் எது உண்மை?
மணல் விலை ரூ. 45 ஆயிரம்: ஒரு லோடு மணல் ரூ. 45 ஆயிரத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு லோடு மணலுக்கு ரூ. 1,000 வீதம் போலீஸ் பெயரில் வசூலிக்கிறார்கள் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டி அளித்துள்ளார். இது குறித்து விளக்கம் வரும் என எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment