5.12.13

வரத்து அதிகரிப்பு: தக்காளி விலை பாதியாகக் குறைந்தது



சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை பாதியாகக் குறைந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் தினமும் விற்பனைக்காக தக்காளி கொண்டுவரப்படுகின்றது.
தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் உற்பத்தி குறைந்ததால் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.55 வரை விற்பனையானது. வரத்து சற்று அதிகரித்ததால் நவம்பர் மாத இறுதியில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் புதன்கிழமை முதல் தக்காளி ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதே போல் தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனைக் கடைகளிலும் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை குறைவு குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறியது:
தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. இதனால் விலை அதிகரித்தது. தற்போது உற்பத்தி அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் வரை 35 லாரிகளில் 450 முதல் 600 டன் வரை தக்காளி கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரித்ததால் தற்போது 60 லாரிகளில் 850 டன் வரை தக்காளி கொண்டுவரப்படுகிறது.
ரூ.40-க்கு விற்ற தக்காளி பாதியாகக் குறைந்து ரூ.20-க்கு விற்பனையாவதால் பொதுமக்களும் ஹோட்டல் உரிமையாளர்களும் வழக்கத்தை விட அதிகளவு தக்காளியை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment