பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 14 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ. ஒரு கோடியே32 இலட்சத்தை தாண்டியது.
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 14 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 03 ஆயிரத்து 547 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், நெற்றிப்பட்டை, கொடை, கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 400 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 650 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,142 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
வெள்ளியிலான பூமாலை, வீடு, காவடி, பால்காவடி, கற்கள் பதிக்கப்பட்ட வேல், குத்துவிளக்கு ஆகியன சிறப்பு வேலைப்பாடுகளுடன் இருந்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் உமா, மேலாளர் ரவி மற்றும் பலர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment