மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக தோல்வி அடைந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. மக்களவைத் தேர்தல் பணியில் பாஜகவினர் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.
வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.
இந்தியா முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களவைத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றுவது பாஜகவின் இலக்கு.
ஆனால், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைக் கவனித்தால், 300 இடங்களில் பாஜக வெல்வது உறுதி. நல்ல நிர்வாகம், வளர்ச்சியை மையப்படுத்தி மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெறும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வோம். மக்களவைத் தேர்தலில் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாஜகவைப் பிளவுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ்தான் மதவாதக் கட்சி.
குஜராத்தில் பெண் உளவுப் பார்த்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு, விசாரணைக் குழுவை அமைத்துள்ளது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.கூட்டத்தில் கர்நாடக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி, கட்சி மேலிடப் பார்வையாளர் தவார்சந்த் கெலாட், அனந்த்குமார் எம்.பி., முன்னாள் முதல்வர்கள் சதானந்த கெüடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் ஆர்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment