28.12.13

"ஆம் ஆத்மி' அரசு இன்று பதவியேற்பு



தில்லியின் ஏழாவது முதல்வராக அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பதவியேற்கிறார். அவரது தலைமையிலான "ஆத் ஆத்மி' அரசின் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கவுள்ளது. அவர்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கேஜரிவாலின் அரசு பொறுப்பேற்கவுள்ளது.
இளம் அமைச்சரவை: ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜரிவால் முதல்வராகவும், அவருடன் ராக்கி பிர்லா (26), சௌரவ் பரத்வாஜ் (34), சோம்நாத் பார்தி (39), சத்யேந்திர குமார் ஜெயின் (49), கிரீஷ் சோனி (49), மணீஷ் சிசோடியா (41) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில், ராக்கி பிர்லா மிகவும் இளம் அமைச்சராகவும் மணீஷ் சிúஸாடியா அதிகபட்ச வயது கொண்டவராகவும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். அந்த வகையில் இது தில்லி அரசியல் வரலாற்றில் இளம் வயதினரைக் கொண்ட முதலாவது அமைச்சரவையாக விளங்கவுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம்: தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், எவ்வித பகட்டும் இல்லாமல் எளிமையான முறையில் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். அதன் முன்னோட்டமாக, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் உத்தரப் பிரதேச மாநிலம், கௌஷாம்பியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவுள்ளார். அவரைப் பின்பற்றி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள ஆறு பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ராம்லீலா மைதானத்துக்கு வர முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவுடன் சிறுபான்மை பலம் கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைமையில் தில்லியில் ஆட்சி அமைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் தெரிவித்தார். அதன் பிறகு ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை பதவி ஏற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
எளிமையான ஏற்பாடு: லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடும் வகையில் மைதானத்தில் ஏற்பாடுகளும் விழா மேடையும் அமைக்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் எளிமையாக நடத்தப்படுவதை ஆம் ஆத்மி கட்சி உறுதிப்படுத்தியது. புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு வழக்கமாக வழங்கப்படும் "விவிஐபி', "விஐபி' அனுமதி அட்டைகள் இம் முறை விநியோகிக்கப்படவில்லை. எல்லோருக்கும் வாய்மொழியாகவே ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பதவியேற்பு விழாவையொட்டி, ராம்லீலா மைதானத்துக்கு தில்லி மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலம் பெருந்திரளாக மக்கள் வருவார்கள் என்பதால் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2,000 ஆயிரம் போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹசாரே, கிரண் பேடி புறக்கணிப்பு: ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற இயக்கத்தில் அரவிந்த் கேஜரிவால் இருந்தார்.
ஆனால், அவர் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது அதை அண்ணா ஹசாரேவும், அவரது ஆதரவாளரான முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரி கிரண் பேடியும் எதிர்த்தனர். இந் நிலையில், தில்லி தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றதும் அவருக்கு ஹசாரே வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து, தனது பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அண்ணா ஹசாரேவுக்கும், கிரண் பேடிக்கும் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால், முறைப்படி தங்களை யாரும் அழைக்கவில்லை எனக் கூறி இருவரும் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment