28.12.13

திமுகவின் தூண்டில் - சிக்குமா தேமுதிக?


மக்களவைத் தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர, திமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே திமுக முயற்சித்து வருகிறது.
இதில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல தேமுதிகவைக் கரைத்து திமுக தம் பக்கம் வரவைத்துள்ளது.
தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு கட்டங்களில் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிகவை அதிமுக அரசு பழி வாங்குகிறது, வெள்ளை உள்ளம் படைத்தவர் விஜயகாந்த் என்று ஒவ்வொரு முறையும் கருணாநிதி பனிக்கட்டிகளை வீசிக் கொண்டே இருந்தார்.
இதில் விஜயகாந்த் குளிர்ந்து போயிருந்த நிலையில், 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரனும் விலகிவிட, தேமுதிகவின் எதிர்காலமே மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்தது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவுக்குச் சென்ற எஸ்றா சற்குணம் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று மறைமுக அழைப்பு விடுத்தார். அதனை பரிசீலிப்பதாக விஜயகாந்த் கூறினார்.
இதே கருத்தை கருணாநிதியிடம் தெரிவித்த எஸ்றா சற்குணம் திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் ஆர்வமாக இருப்பதாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியும் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி என்று கூறினார்.
ரகசிய பேச்சுவார்த்தை: திமுகவின் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தகவல் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான ஈஸ்வரப்பா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமியும் ஒன்று இரண்டு முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
விஜயகாந்த்தின் உத்தரவுப்படி தேமுதிகவின் கொள்கைப் பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
தேமுதிக சார்பில் முதலில் 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாம். ஆனால் இதற்கு திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிறகு நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 7 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் தர திமுக சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தேமுதிகவும் ஏற்றுக்கொண்டதாம்.
விரைவில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் சந்தித்து தேமுதிக போட்டியிடும் தொகுதிகளை வரையறை செய்ய உள்ளனர்.
தேமுதிக நெருங்கி வந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது திமுக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட்டுகளுக்கு அதிமுகவில் ஒன்று அல்லது இரண்டு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், இதை மார்க்சிஸ்ட்டுகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திமுக கருதுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற சம்மதித்தால் 3 தொகுதிகள் வரை தர தயராக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட்டுகளின் செயற்குழு கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் அதிமுக, திமுக தொடர்பாக அலசப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:-
அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி திமுக. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, புதிய பென்ஷன் திட்டம் என காங்கிரஸ் செய்த அத்தனை தவறுகளுக்கும் உடந்தையாக இருந்த இயக்கம் திமுக. அதனால் காங்கிரஸýடன் எப்படி கூட்டணி இல்லையோ, அதுபோல திமுகவுடனும் நிச்சயம் கூட்டணி இல்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று திட்டமிட்டு, அதற்கேற்ப திமுக தலைமை காய்களை நகர்த்தி வருகிறது.
ஆனால் தேமுதிகவோ, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா தரப்பினருடனுமான தொடர்பைக் கைவிடாமல், எந்தவித முடிவும் எடுக்காமல் தொடர்கிறது. திமுகவுக்கும் கதவு திறந்தே இருக்கிறது. வலுவான கூட்டணி அமையாத பட்சத்தில் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடக்கூடும் என்பதால், முனைப்புடன் கூட்டணி முயற்சிகளில் அந்தக் கட்சியின் தலைமை ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. தேமுதிக யார் பக்கம் சாயும் அல்லது யாரால் இழுக்கப்படும் என்கிற கேள்வி இழுபறியில் தொடர்வதால், திமுக தலைமை கவலையடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment