""குஜராத் கலவரத்துக்காக முதல்வர் நரேந்திர மோடி மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று பாஜக கோரியுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் வெள்ளிக்கிழமை கூறியது:
மோடி மீது 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதூறுப் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவரிடமும் நாட்டிடமும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத் கலவர வழக்கில் மோடி நிரபராதி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அவசரநிலைக் கால மனப்பான்மை அதற்கே பாதகமாக மாறும் என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர். இதனிடையே, பிகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி இவ்விவகாரம் குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அளித்த நற்சான்றிதழை ஆமதாபாத் பெருநகர நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது, மோடியின் பெயரைக் கூறி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார் போன்ற போலி மதச்சார்பின்மை தலைவர்களின் முகத்தில் விழுந்த அறையாகும்'' என்றார்.
No comments:
Post a Comment