குஜராத் கலவரத்தால் நிலைகுலைந்து போனதாகத் தெரிவித்துள்ள அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி, இந்தக் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்பில்லை என்று ஆமதாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் நிம்மதியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இணையதள வலைப்பூவில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தால் நான் நிலைகுலைந்து போனேன். இந்தக் கலவரத்தைக் கண்ட ஒருவர் அடைந்ததை துன்பம், வருத்தம், துயரம், வலி, வேதனை என்று வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இச்சம்பவத்தால் இவ்வளவு காலம் நான் அனுபவித்த வேதனையை இப்போதுதான் முதல் முறையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
நாட்டில் இதற்கு முன் நிகழ்ந்த கலவரத்தின்போது எடுக்கப்பட்டதை விட, குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு மிகத்தீவிரமாகவும் உறுதியுடனும் நடவடிக்கை எடுத்தது.
ஆமதாபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பானது, நாட்டிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமான நீதிமன்றப் பரிசீலனைக்குப் பின் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
12 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்தீர்ப்பால் நான் விடுதலை பெற்றதாகவும் அமைதி அடைந்ததாகவும் உணர்கிறேன்.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பொய்கள் கூறப்பட்டு வந்த நிலையில், நெருக்கடியான இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஆதரவாக நின்றதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
வலி மற்றும் வேதனை மிகுந்த இந்தப் பயணத்தில் இருந்து வெளிவந்துள்ளேன். எனது இதயத்தில் எந்தவிதக் கசப்புணர்வும் ஏற்பட்டு விடக் கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தேன்.
இந்தத் தீர்ப்பை தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வியாக நான் கருதவில்லை. அதேபோல் இதை தனிப்பட்ட வெற்றி, தோல்வியாகக் கருத வேண்டாம் என்று அனைவரையும், நண்பர்களையும், எனது அரசியல் எதிரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
மற்றவர்களை வேதனைப்படுத்துவதில் திருப்தி அடைபவர்கள், என் மீதான தாக்குதலை நிறுத்த மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இனியாவது குஜராத்தின் 6 கோடி குஜராத் மக்களை பொறுப்பின்றி களங்கப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான அவர், குஜராத் கலவரத்துக்காக வருத்தம் தெரிவிக்க தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த தனது எண்ணங்களை முதல் முறையாக அவர் தற்போது விரிவாக வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment