18.12.13

தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் : ராமதாஸ்


லோக்பால் அமைப்புக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட லோக் அயுக்தா அமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களின் 50 ஆண்டு கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் லோக்பால் சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் போதிலும், அதில் தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு அனுமதி பெற இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது லோக்பால் சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களவையில் நிறைவேறிய லோக்பால் சட்ட முன்வரைவுடன் ஒப்பிடும்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முன்வரைவு மிகவும் வலிமையானது. மாநிலங்களவையில்  2011 ஆம் ஆண்டு  உறுப்பினர்கள் முன்வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற தேர்வுக்குழு மொத்தம் 13 திருத்தங்களை பரிந்துரைத்தது. அதில் மூன்றைத் தவிர மற்றவற்றை ஏற்றுக் கொண்டு  திருத்தப்பட்ட முன்வரைவை மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்பார்க்கப்பட்ட சில திருத்தங்கள் முன்வரைவில் இடம்பெறவில்லை என்ற போதிலும், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள  லோக்பால் சட்டம் ஊழலை ஒழிப்பதற்கு ஓரளவுக்காவது உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஊழலைத் தடுக்க லோக்பால் அமைப்பே இல்லை என்பதைவிட ஓரளவு அதிகாரமாவது கொண்ட லோக்பால் அமைக்கப்படுவது சிறந்தது.  இதனால் ஊழல் உடனே ஒழிந்து விடாது என்றாலும், ஊழலை ஒழிப்பதற்கான தொடக்கமாக இருக்கும். அவ்வகையில் லோக்பால் முன்வரைவு நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன்.
தேசிய அளவில் லோக்பால் அமைப்புடன் சேர்த்து மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று முந்தைய லோக்பால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயல் என கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பிரிவு நீக்கப்பட்டது. இப்போது லோக்பால் முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அதேபோன்ற அம்சங்களைக் கொண்ட லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த மாநில அரசுகள் முன்வரவேண்டும். இந்தியாவில் மொத்தம் 19 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்புகள் இருக்கும் போதிலும் கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் லோக் அயுக்தாக்கள் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு தான் லோக் அயுக்தா மிகவும் அவசியமாகும். எனவே, முதலமைச்சர் மீதான  குற்றச்சாற்றுகளையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் கூடிய, லோக்பால் அமைப்புக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட லோக் அயுக்தா அமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்ட முன்வரைவை ஆளுநர் உரைக்காக அடுத்த மாதம் கூடும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment