தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றலாம் என சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து, நிலைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
""காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மத்திய அரசிடமிருந்து சலுகைகளை பெறுகின்றன. அவற்றை நிதியுதவியாகவே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனால், அக்கட்சிகள் அரசு அமைப்புகளாக கருதப்படும். எனவே, பொதுத் தகவல் அலுவலரை நியமித்து, உரிய தகவல்களை மக்களுக்கு அக்கட்சிகள் அளிக்க வேண்டும்'' என்று மத்திய தகவல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ""ஏற்கெனவே, அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. அதனால், அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த மற்றொரு அமைப்பு தேவையில்லை'' என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
அதைத் தொடர்ந்து, தகவல் உரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அரசு அமைப்புகளாகக் கருதப்படக்கூடாது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹனவதி, சட்டத்துறைச் செயலர் பி.ஏ.அகர்வால் உள்ளிட்ட பலர் நிலைக்குழுவின் முன் ஆஜராகி கருத்து தெரிவித்தனர்.
சட்ட திருத்தத்துக்கு எதிராக வாஹனவதியும், ஆதரவாக அகர்வாலும் கருத்து தெரிவித்தனர்.
வாஹனவதியின் கருத்தை நிராகரிப்பதாகவும், அகர்வாலின் கருத்தை ஏற்பதாகவும் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment