23.12.13

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் விண்ணில் ஏவுவது குறித்து டிச.27-இல் முடிவு: இஸ்ரோ தகவல்

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் ஏவுவது குறித்து டிச.27-ஆம் தேதி நடைபெறும் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு(எம்.ஆர்.ஆர்.)கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக(இஸ்ரோ) செய்திதொடர்பாளர் தேவிபிரசாத் கார்னிக் தெரிவித்தார்.
இது குறித்துபெங்களூருவில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்தாண்டு ஜன.5-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், ஜிஎஸ்எல்வி-டி5 ஏவுவதற்கு தயார்நிலையில் உள்ளதா என்பது குறித்துடிச.27-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இஸ்ரோவின் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட், தகவல் தொடர்பு விண்கலமான ஜிசாட்-14-ஐ பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். ராக்கெட்டின் 3 நிலைகளும் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டில் விண்கலத்தை பொருத்தும்பணி அடுத்தவாரத்தில் நடைபெறும். அனைத்துவகையான முன்னேற்பாடுகளும் டிச.26-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டிச.27-இல் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு கூட்டம்நடைபெறும். அக்கூட்டத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான தேதி, நேரம் ஆகியவை முடிவுசெய்யப்படும்.
கடந்த ஆக.19-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு தயார்நிலையில் இருந்தபோது, ஏவுவதற்கு 2 மணி நேரம்முன்பு நடந்த கடைசிக்கட்ட சோதனையில் திரவ எரிப்பொருள் வைக்கப்பட்டிருந்த 2-ஆம் நிலையில் கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட்டை ஏவும்பணி ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு எரிபொருளை அகற்றிவிட்டு, ராக்கெட் ஒருங்கிணைப்புக்கட்டடத்திற்கு ஜிஎஸ்எல்வி-டி5 கொண்டுசெல்லப்பட்டது.அஃப்னர்-7020 என்ற அலுமினியம் கலவைப்பொருளால் செய்யப்பட்ட எரிபொருள் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, எரிபொருள் கசியும் என்ற காரணத்தால் அப்போதைக்கு திட்டம் கைவிடப்பது. ஆனால், தற்போது ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டில் புத்தம் புதிய எரிபொருள் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை 2-ஆவது நிலையில் பழைய எரிபொருள் தொட்டியை பயன்படுத்தியிருந்தோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment