23.12.13

ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியானார் தேவயானி: தூதருக்கு இணையான அந்தஸ்து


அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவயானி கோப்ரகடேவை ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும், தூதரக அதிகாரிக்கு வழங்கப்படுவது போன்று தேவயானிக்கு சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபைக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடேவை அமெரிக்கச் சட்டத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனுக்கு, தேவயானி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேவயானி கோப்ரகடே, ஐ.நா. சபைக்கான இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் அமெரிக்கச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் ஜேன் லியாசனையும் அசோக் முகர்ஜி நேரில் சந்தித்து, தேவயானி கோப்ரகடே விவகாரம் தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இந்தியாவின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அசோக் முகர்ஜி அளித்த பேட்டியில், தேவயானிக்கு சட்ட விலக்கு அளிப்பது தொடர்பான கோப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஐ.நா. சபை அனுப்பி வைத்திருப்பதாகவும், இனிமேல் இந்த விவகாரம் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா இடையிலானது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment