23.12.13

ஊழல் பற்றிப் பேச காங்கிரஸூக்கு தகுதியில்லை

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

ஊழல் பற்றிப் பேச காங்கிரஸூக்கு தகுதியில்லை என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழலில் திளைத்தவர்கள் இன்று ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறுவது வியப்பாக உள்ளது என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மும்பையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர் ஒருவரது பேச்சை நான் நேற்று கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார். அவரின் துணிச்சலைப் பாருங்கள். (ராகுல் காந்தியை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.) காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊழல் செய்துகொண்டே நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதாகப் பேசிவருகின்றனர். இப்படிப் பேச அவர்களுக்கு எப்படி மனம் வந்தது? ஊழல் செய்வதும், பின்னர் அப்பாவி போல முகம் காட்டி ஊழலுக்கு எதிராகப் பேசுவதும் அவர்களுக்கு கைவந்தகலை.
ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல் குறித்து விசாரித்த நீதிபதிகள் குழு, இந்த ஊழலில் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒருபுறம், ஊழலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற மகாராஷ்டிர அரசு முடிவு செய்கிறது. மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ஒருவர் தில்லியில் ஊழல் பற்றி உபதேசம் செய்கிறார்.
காங்கிரஸ் பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து விஷயங்களும் அவர்களின் உத்தரவுப்படியே நடக்கின்றன. ஆனாலும் அவர்கள் உரையாற்றும் போது வேறு ஏதோ ஒரு அரசு சார்பிலோ அல்லது வேறு நாட்டின் சார்பிலோ பேசுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும்.
காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இது அவர்களின் குணம் போலும். ஒருவேளை இதை அவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து கற்றுக் கொண்டார்களோ என்னவோ?
சர்தார் படேல், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ சகோதரர்களுக்குள் பகைமையை மூட்டி மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது.
வாக்கு வங்கி அரசியலில் இருந்து இந்தியாவை விடுவித்து அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வரை இப்போது நாம் சந்திக்கும் பிரச்னைகள் தீராது. பிரச்னைகளுக்கு நமது வரலாறோ அல்லது புவியியலோ காரணமல்ல; காங்கிரஸ் ஆளும் அரசுகள்தான் காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு' என்ற அறைகூவலை முதலில் விடுத்தது மும்பை நகரம்தான். இப்போது அதே நகரில் இருந்து "காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற குரல் வெளிப்பட வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலில் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக வாக்கு கேட்க வேண்டுமே தவிர கட்சியின் பெயரில் வாக்கு கேட்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.
பரம்பரை ஆட்சி, ஊழல், பணவீக்கம், மோசமான நிர்வாகம் இவற்றிலிருந்து நாட்டை விடுவித்து, ஒற்றுமையைப் பேணவேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.
சிறுபான்மையின வாதமும், மதவாதமும் காங்கிரஸின் பாரம்பரியமாகும். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் 90 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங் அரசு, அங்கு அவர்களின் நலவாழ்வுக்கான பெரிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தது. இதைப் பற்றி ஊடகங்களும் பெரிதாக எழுதின.
ஆனால், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கான நலவாழ்வுக்காக எவ்வளவு செலவானது என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டங்களுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை என்று அரசு பதிலளித்தது. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
நாட்டை கொள்ளையடிப்பவர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்கின்றனர். இது குழந்தைக்குக் கூட தெரியும். இந்தப் பணத்தை மீட்டு வந்து ஏழைகளுக்காகச் செலவழிக்க வேண்டும்.
"வெளிநாட்டு வங்கிகளில் பாஜக தலைவர்கள் யாருக்கும் பணம் இல்லை' என்று அத்வானியின் தலைமையில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் எழுத்துமூலம் தெரிவித்தனர். கறுப்புப் பணம் தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றி, ஒரு குழுவை அமைத்து, 3 ஆண்டுகளில் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஏழைகளுக்குத் தர முடியுமா? என்று காங்கிரஸிடம் சவால் விடுகிறேன்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் பேசுவது மக்களைச் சென்றடையக் கூடாது என்பதற்காக மும்பையின் சில பகுதிகளில் கேபிள் டிவி இருட்டடிப்பு செய்யப்படுவதை காங்கிரஸ் உறுதிப்படுத்திக் கொண்டதாக நகர பாஜக தலைவர் ஆஷி ஷேலார் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கேபிள் இருட்டடிப்பால் டிவி திரையில் மோடி இல்லாமல் போகலாம். ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் மோடி இடம்பெற்றுள்ளார்.
மோசமான ஆட்சிதான் நாட்டின் மிகப் பெரிய பிரச்னை. இது நீரிழிவு நோய் போன்றது. மற்ற நோய்களுக்கும் இதுவே மூலகாரணம் ஆகிறது. மோசமான ஆட்சி என்னும் நோய்க்கு தீர்வுகாண வேண்டுமானால் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கொண்டுவர மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் மோடி.

No comments:

Post a Comment