23.12.13

சிங்கப்பூர் கலவரம்: தொழிலாளர்களுக்கு போலீஸார் அறிவுரை


சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இந்தியர்கள் உள்பட 200 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அந்நாட்டுப் போலீஸார் அறிவுரை வழங்கினர்.

குற்றவியல் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு வரவழைத்து எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பல்வேறு ஆலோசனைகளை தொழிலாளர்களுக்கு போலீஸார் வழங்கினர்.
"ஒரு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை சார்பில் இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமானதுதான்.
மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமலும், காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகாமலும் இருக்கவே இந்த ஏற்பாடு' என காவல்துறை ஆணையர் எங்க்ஜூ ஹீ தெரிவித்ததாக "தி ஸ்டிரெய்ட் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்திய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த "லிட்டில் இந்தியா' இந்தியா பகுதியில் கடந்த 8ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து கலவரம் வெடித்ததில், போலீஸார் மற்றும் அதிகாரிகள் காயமடைந்தனர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக வங்கதேசத்தினர் 2 பேர், இந்தியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். 52 இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். 200 பேரை போலீஸார் எச்சரிக்கை செய்து மீண்டும் பணியாற்ற அனுமதித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களில் 28 பேர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment