15.12.13

பழனி தைப்பூசத் திருவிழா ஜன. 11இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜன. 11ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் ஜன. 17ஆம் தேதியும், தெப்பத் தேரோட்டம் ஜன. 20ஆம் தேதியும் நடைபெறுகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனியில் ஆண்டு முழுக்க திருவிழா நடைபெற்றாலும் தைப்பூசத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. பழனி தைப்பூசத் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, மயில் பீலிக்காவடி, மலர்க்காவடி என பல்வேறு காவடிகளுடன் பாதயாத்திரையாக வருவார்கள்.
 பக்தர்கள் வருகையை முன்னிட்டு பல இடங்களில் பக்தர்கள் இளைப்பாறும் இடம், குடிநீர் வசதி, தாற்காலிக பேருந்து நிலையம், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பெருமை மிக்க தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 11ஆம் தேதி (சனிக்கிழமை) பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடிக்கட்டி மண்டபத்தில் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இந்த விழா 10 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் எழுந்தருள்கிறார். வரும் ஜனவரி 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளிóதேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.    வரும் ஜனவரி 20ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவு நாள் நிகழ்ச்சியாக இரவு தெப்பத் தேரோட்டமும், நள்ளிரவு திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment