15.12.13

முழு கண்காணிப்பில் ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில்: 40 கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பு

ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா.

தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப் பகுதியை முழுவதும் கண்காணிக்க 40 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதாலும், தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளதாலும் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் அண்மையில் வெட்டப்பட்டன.
மேலும், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ள ஸ்ரீவடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரம், கோயிலின் தேர் ஆகியவற்றுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து சென்னையிலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைப்பது, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்பேரில், ராஜகோபுரம் நுழைவு வாயில், ஆடிப்பூர மண்டபம், ஸ்ரீஆண்டாள் பிறந்த நந்தவனம், ஆண்டாள் கோயில் சன்னதி, கடை வீதி, ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், சுற்றுப் பிரகாரங்கள், கண்ணாடி மாளிகை முன்புறம், சக்கரத்தாழ்வார் சன்னதி, வடபத்ரசயனர் கோயில் படிக்கட்டுகள், பகல்பத்து மண்டபம் என 40 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனைக் கண்காணிக்க தக்கார் அறை, செயல் அலுவலர் அறை, போலீஸ் புறக்காவல் நிலையம் ஆகிய இடங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
கேமராக்கள் எதிர் எதிர் திசையில் பொருத்தப்பட்டுள்ளதால், கோயிலுக்குள் வருபவர்கள் முகம் தெளிவாகத் தெரியும். இதன்மூலம் கோயிலின் அனைத்துப் பகுதிகளும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது என்றார் தக்கார் ரவிச்சந்திரன்.



No comments:

Post a Comment