15.12.13

ஆட்சியமைக்க கேஜரிவால் நிபந்தனை: தில்லி அரசியலில் புதிய திருப்பம்

தில்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சனிக்கிழமை சந்தித்து விட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால்.



தில்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து தங்களது கட்சி முடிவெடுப்பதற்கு முன்பு காங்கிரஸூம் பாஜகவும் தங்களது 18 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி திடீர் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தில்லி அரசியல் இழுபறிக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு சுருங்கியுள்ளதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தில்லி அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால், "பெரும்பான்மை பலம் இல்லாததால் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார்' என அவரிடம் பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ வர்தன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க விரும்பினால் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜே.பி. அகர்வால் துணைநிலை ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வரும்படி ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை நஜீப் ஜங் அழைத்தார். அதன்படி, அவரை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மணீஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதரவை ஏற்க நிபந்தனை:
துணைநிலை ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:
"தில்லியில் ஆட்சி அமைக்க கால அவகாசத்தை ஆம் ஆத்மி கட்சி கோரவில்லை. பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது உறுதியானால், மீண்டும் வாய்ப்பு கோருங்கள் என துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்கவில்லை. ஆனால், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வலிய வந்து எங்களுக்கு ஆதரவு தருவது ஏன்?
இரு வேறு துருவங்களான அரசியல் கட்சிகள் எவ்விதக் காரணமுமின்றி ஆம் ஆத்மி ஆட்சி அமைய அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். பெரும்பான்மை பலம் இல்லாத கட்சிக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்காது; பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், நாங்களும் ஆதரவு கேட்க மாட்டோம்.
இதற்குப் பிறகும் ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி அமைய பாஜகவும், காங்கிரஸýம் விரும்பினால், அதற்கு எங்கள் கோரிக்கைகளை இரு கட்சிகளும் ஏற்க வேண்டும். தில்லியில் விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவது, தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து, மின்சார விநியோக நிறுவனங்களை கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கைக்கு உள்படுத்துவது, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை கைவிடுவது, குடிநீர்க் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் சட்டத்தை ரத்து செய்வது, தில்லியில் வலுவான லோக் ஆயுக்த அமைப்பது உள்ளிட்ட 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்துள்ளோம். முந்தைய காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.
அக் கோரிக்கைகளை இரு கட்சிகளும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால், பொது மக்கள் கருத்தைக் கேட்டு ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிப்போம்' என்றார் அரவிந்த் கேஜரிவால்.
துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கைச் சந்தித்தபோது, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு அனுப்பிய 18 நிபந்தனைகள் அடங்கிய கடிதங்களின் நகல்களை அரவிந்த் கேஜரிவால் அளித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் இந்த நிலைப்பாட்டால் தில்லியில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
துணைநிலை ஆளுநர் அறிக்கை
தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும், புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது. தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைப்பதில் தயக்கம் காட்ட, அடுத்த இடத்தை வகிக்கும் ஆம் ஆத்மியோ நிபந்தனைகளை விதித்து விறைப்பு காட்டுகிறது.
இந்நிலையில், தில்லியின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சனிக்கிழமை விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் ஆட்சி அமைக்க அழைத்தும் பாஜக மறுத்திருப்பது மற்றும் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனைகளை விதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு குறித்து நஜீப் ஜங் எடுத்துரைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அறிக்கையின் நகலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நஜீப் ஜங் அனுப்பியிருப்பதாகவும், இந்தப் பிரச்னையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்த உத்தரவுக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்ற தில்லியில் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) முடிவடைவது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment