15.12.13

தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பேட்டி

தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட திட்டமிடுதல் கூட்டத்துக்குப் பிறகு, இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டினாசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் எம். லெனின், மாநிலப் பொருளாளர் ஆனந்த கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: 
புதுதில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு, இந்திய அளவில் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக வெற்றி பெற்றதை ஏராளமானோர் அதிசயத்துடன் விசாரித்து வருகின்றனர்.
இது எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. கட்சியில் இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம்.
முதலில் மாவட்ட அளவில் தாற்காலிகக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டக் குழுவினர் ஒன்றிய அளவிலான குழுக்களை ஏற்படுத்துவர். ஒன்றியக் குழுவினர் ஊராட்சி குழுக்களை ஏற்படுத்தவேண்டும். தமிழகத்தில் இதுவரை 14 மாவட்டங்களில் தாற்காலிகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆம் ஆத்மியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். புதுதில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவு பெற்ற பிறகே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, 2 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகார பரவலாக்கம், நேரிடை ஜனநாயக பங்கேற்பு, மக்களோடு இணைந்து தீர்மானிப்பது போன்ற கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவோம்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, ஆம் ஆத்மி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு கூறி வருகின்றனர். தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டங்களை வகுத்து செயல்படுவோம் என்றனர்.

No comments:

Post a Comment