15.12.13

"வங்கப்புலி' கங்குலிக்கு வலை விரிக்கும் பாஜக!



இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் செளரவ் கங்குலிக்கு பாரதிய ஜனதா கட்சி, அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான டிக்கெட் வழங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து கங்குலி இன்னும் முடிவெடுக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் இருந்து கங்குலிக்கு இந்த அழைப்பு வந்ததாகவும், தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் அவரை விளையாட்டு அமைச்சராக நியமிப்பதாக மோடி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதை கங்குலியும் மறுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ""ஆமாம், தேர்தலில் போட்டியிடுவதற்கான அழைப்பு வந்தது. ஆனால், இன்னும் இதுகுறித்து முடிவு செய்யவில்லை. அடுத்த சில நாள்களுக்கு எனக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. விரைவில் என் முடிவை அறிவிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் கங்குலி தன் நண்பரும், பாஜக தேசிய செயலாளருமான வருண் காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசினார். வருண் காந்தி மேற்கு வங்க பாஜக அமைப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு நடந்ததில் இருந்து, பாரதிய ஜனதா சார்பில் கங்குலி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் பகுதியில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகம். எனவே, இதில் ஏதாவது ஒரு தொகுதியில் கங்குலி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வென்றாலும் தோற்றாலும் ஒரே மாதிரியான உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்திய அணியை ஆக்ரோஷமாகப் போராட வைத்தவர் கங்குலி. கேப்டனாக திறம்பட செயல்பட்ட அவருக்கு மேற்கு வங்கத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதனால் அவர் வெற்றிபெறுவதிலும் சிரமம் இருக்காது. கங்குலி தேர்தலில் வெற்றிபெற்று விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றால், விளையாட்டுத் துறை மேலும் வளர்ச்சிபெறும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment