15.12.13

நள்ளிரவில் தீ விபத்து: 12 பாத்திரக் கடைகள் எரிந்து சேதம்

தீ விபத்தில் பற்றி எரியும் பாத்திரக் கடைகள்.

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே இருந்த 12 பாத்திரக் கடைகள் எரிந்து சேதமடைந்தன.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 27 பாத்திரக் கடைகள் உள்ளன. இவற்றின் மேற்கூரை இரும்புத் தகரத்தால் வேயப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் மரப் பலகைகளால் ஆன தடுப்புகளைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கடையையும் பிரிக்கும் வகையில் செங்கல் சுவர் ஏதும் எழுப்பப்படவில்லை. இக் கடை ஒன்றில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு புகை வந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பின்னர், இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், புகை வந்த கடையின் இரும்பு ஷட்டரை உடைக்க முடியவில்லை. இதேநேரத்தில், அந்தக் கடையில் இருந்து உள்புறமாகவே மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. ஒவ்வொரு கடையும் மர பலகைகளால் தடுக்கப்பட்டு இருந்ததால் தீ பரவுவதை தீயணைப்பு வீரர்களால் உடனே தடுக்க முடியவில்லை.
தொடர்ந்து மளமளவென எரிந்த தீயைக் கட்டுப்படுத்த போளூர், செங்கம், தண்டராம்பட்டு, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் வ.ராமசாமி தலைமையில் 45 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தது.
12 கடைகள் சேதம்:
இவ் விபத்தில் 2 கடைகள் அதிகப்படியான சேதமும், 10 கடைகள் லேசான சேதமும் அடைந்தன. 12 கடைகளின் தடுப்புப் பலகைகள், மர அலமாரிகள், சாமான்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகள், மின் வயர்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், கடைகளில் இருந்த சில்வர் மற்றும் பித்தளை சாமான்களும் புகை படிந்து சேதமடைந்தன.
இவற்றின் தோராய சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஆறுதல்:
தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆறுதல் கூறினர்.

No comments:

Post a Comment