15.12.13

2014 ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்பு புதிய மக்களவை அமைக்கப்படும்


அடுத்த பொதுத்தேர்தல் 2014-ஆம் ஆண்டில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு முன்பு 16-வது மக்களவை அமைக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

அமெரிக்கா சென்றுள்ள சம்பத், அங்குள்ள புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனையாளர் அமைப்பு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
2014 மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இந்தத் தேர்தலில் 78 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் 11.8 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மார்ச் மாதத்தின் மத்தியில் தேர்தல் தொடங்குகிறது. 16-வது மக்களவைக்கு மொத்தம் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியத் தேர்தலைப் பொறுத்தவரை எந்தச் சூழ்நிலையிலும் காலக்கெடுவை தவறவிட்டதில்லை.
இப்போதைய மக்களவையின் பதவிக்காலம் மே மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தேர்தல் தொடங்கும் முதல் நாளைக் கணக்கில் கொண்டு, 6 வாரங்களுக்கு முன்னதாக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
2014 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவின் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் தேதி நெருங்கும் வரை, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது, தவறானவற்றை நீக்கம் செய்வது போன்ற பணிகள் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தலுக்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். சட்டம் ஒழுங்கு, தளவாடப் பொருள்கள், வாக்குச்சாவடிகளின் நிலை, பணியாள்கள், உபகரணங்கள் ஆகியவை தொடர்பான ஆய்வுகளும் இதில் அடங்கும்.
தேர்தலுக்கு முன்பாக, அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் அட்டவணை தயார் செய்யப்படும்.
அப்போது, தட்பவெட்ப நிலை, தேர்வு விவரங்கள், விடுமுறை மற்றும் விசேஷ தினங்கள், அறுவடை நேரங்கள் போன்றவை தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும்.
நேர்மை, நடுநிலைமை, கட்டுக்கோப்பு இவையே 2014 மக்களவைத் தேர்தலில் முக்கிய குணாதிசயமாக இருக்கும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கலந்து ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை குறித்துக் கொள்ள ஒரு தனிப்பிரிவு செயல்படும். வேட்பாளர்கள் பணம் கொடுத்து தங்களுக்குச் சாதகமாக செய்தி வெளியிடச் செய்தால், அந்தச் செலவு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக செலவு செய்யும் வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையதளம் மூலம் வாக்குப்பதிவு செய்வதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் தற்போதைக்கு அந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
எப்பொழுதும் கண் பார்வையிலேயே உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அடிக்கடி புகார் எழும்போது, இணையதள வாக்குப்பதிவை எந்த நம்பிக்கையில் அனுமதிக்க முடியும்?. எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்தவாறே வாக்களிப்பதற்கு தற்போதைக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வாக்களிக்க விரும்பினால், தேர்தல் சமயத்தில் இந்தியாவுக்கு வந்து வாக்களிக்கட்டும். குறிப்பாக, வாக்களிக்கும் விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் அதிக ஈடுபாடு இல்லை. பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றபோதும், சில ஆயிரம் பேரே தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று சம்பத் கூறினார்.

No comments:

Post a Comment