15.12.13

மண்டேலா உடல் இன்று அடக்கம்


மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் அவரது இடைவிடாத போராட்டத்தால் அந்நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க நாட்டில் முதல் கருப்பின அதிபராக 1994ஆம் ஆண்டு பதவியேற்றார்.
இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 95ஆவது வயதில் கடந்த 5ஆம் தேதி மரணமடைந்தார். பின்னர், ஜோகன்னஸ்பர்கில் உள்ள எப்.என்.பி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டு மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக மண்டேலாவின் உடல் விமானம் மூலம் எம்தாதாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக 31 கி.மீ. தொலைவிலுள்ள குனு கிராமத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுகிலும் அவருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment