15.12.13

இந்திய துணைத் தூதர் கைது இருதரப்பு உறவுகளை பாதிக்காது: அமெரிக்கா நம்பிக்கை



இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

1999ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியான தேவயானி கோப்ரகடே, அமெரிக்காவில் இந்திய துணைத் தூதராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும்போது அமெரிக்க போலீஸார் அவரை கைது செய்து கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு, நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல், கூடுதலாக வேலை வாங்கியதாகவும், அவருக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகவும் தேவயானி கோப்ரகடேவின் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தேவயானி கோப்ரகடேவை கைது செய்த விதம் இந்தியாவையே அவமதிப்பதாக உள்ளதாக அமெரிக்கத் தூதர் நான்சி பவெலை அழைத்து, இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் இந்தியாவின் கவலையையும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், ""நாங்கள் இந்தச் சம்பவத்தை சட்ட ரீதியாக கையாண்டு இருக்கிறோம். இந்தியாவுடன் நீண்ட கால உறவைக் கொண்டுள்ள நாங்கள், இத்தகைய உறவு தொடரும் என நம்புகிறோம்.
தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா தீர்மானத்தின்படி, இந்திய துணைத் தூதருக்கு அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனில், அவை தூதரக பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான பிரச்னைகளாக இருக்க வேண்டும்'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா தேசாய், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகத்துடன் ஆலோசித்து வருகிறார்.
இது குறித்து வாஷிங்டனில் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவயானி கோப்ரகடே நம் நாட்டுக்காக தொடர்ந்து கடமையைச் செய்வதற்கு அவருக்குரிய மரியாதை தரப்பட வேண்டும். இரண்டு குழந்தைகளின் தாயான அவரை,அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment