15.12.13

இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்பட வேண்டும்: நவாஸ் ஷெரீஃப் சகோதரர் வலியுறுத்தல்

தேச வளர்ச்சிக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் வலியுறுத்தியுள்ளார்.
நவாஸ் ஷெரிஃப்பின் சகோதரரும், அந்நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப், இந்தியா வந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சனிக்கிழமை அவர், அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, இந்தியா - பாகிஸ்தான் வளர்ச்சிக்காக, கடந்த கால சம்பவங்களை இருநாட்டு மக்களும் குழித் தோண்டி புதைத்து விட வேண்டும் என்றும், இருநாட்டின் வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கும் முட்டுக்கட்டையை தகர்த்தெறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்பு போரிட்டு கொண்டிருந்த ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள நாடுகள், தற்போது வளர்ச்சி என்னும் குறிக்கோளுக்காக கடந்தகால சம்பவங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இதில் இருந்து இருநாடுகளில் உள்ள பஞ்சாப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராட்டு: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அந்த மாநில அரசு இலவசமாக மின்சாரம் வழங்கி வருவதை பாராட்டிய ஷாபாஸ் ஷெரீஃப், இதுபோன்று தம்மால் தனது மாகாணத்தில் வழங்க முடியவில்லை என்று ஏமாற்றம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment