15.12.13

புதியவர்களே, வாருங்கள்... நான் இருக்கிறேன்! - இளையராஜா

புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன், என்று இளையராஜா பேசினார்.
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் 'ஒரு ஊர்ல'.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேபில் நடந்தது. பொதுவாக தான் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டுக்களுக்கு கூட போகாத இசைஞானி இளையராஜா, முற்றிலும் புதியவர்கள் உருவாக்கியுள்ள இந்தப் பட இசை விழாவுக்கு வந்திருந்தார்.
புதியவர்களே, வாருங்கள்... நான் இருக்கிறேன்! - இளையராஜா
விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் பேசுகையில், "என்னை தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். என்று சொல்வதை விட இளையராஜா அவர்களின் ரசிகன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை. அவரால் உருவாக்கப்பட்ட இயக்குநர்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவில் நிறைய தயாரிப்பாளர்கள் நிறைய முதலீட்டில் படங்கள் தயாரிக்கின்றனர். ஆனால் போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுப்பது என்பது யாருக்கும் புரிய வில்லை. அதற்குத்தான் தயாரிப்பாளர் சங்கம் கூடிய விரைவில் முடிவெடுக்க உள்ளது.
இளையராஜா அவர்கள், தன் பாடல்களுக்கு காப்பி ரைட் சட்டப்படி சம்பாதித்து இருந்தால் பில்கேட்ஸ் அவர்களைவிட அதிகமாக சம்பாதித்து இருப்பார்," என்றார்.
இளையராஜா பேசுகையில், "ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது.
எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. அது நூறு நாள் படமானாலும், வெள்ளி விழா படமானாலும் மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்த படம் இருந்ததில்லை.
அந்த காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு எனது பெயர் பயன்பட்டுள்ளது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம் ஏன் இசை அமைக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். அதற்கு 'நான் இசையமைத்து நீ வந்தது மாதிரி, அவனும் வந்து விட்டு போகட்டுமே. உனக்கு உண்டான இடம் உனக்கு... அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு' என்பேன்.
புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன்," என்று இளையராஜா பேசினார்.
இந்த விழாவில் கவிஞர் மூ.மேத்தா, இயக்குனர்கள் பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், ரத்தினகுமார், விஜய்மில்டன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். படத்தின் நாயகன் வெங்கடேஷ், கதாநாயகி நேஹா பட்டீல், நான்கடவுள் முரளி, பேபி சௌந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் படத்தின் தயாரிப்பாளர் வேலுச்சாமி வரவேற்றார். இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment