இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி சல்மான்கான் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் அப்படி ஒரு ராசி. மான் வேட்டை வழக்கு, குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு என அவர் கடுமையான குற்றங்களில் சிக்கி, ஜாமீனில் வெளியில் உள்ளார்.
தற்போது மீண்டும் அவர் மீது ஒரு புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
இதனை பதிவு செய்திருப்பது ஹைதராபாத் போலீஸ். முஸ்லிம்களின் மத உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளதால் இந்த வழக்கை பதிவு செய்வதாக போலீஸ் அறிவித்துள்ளது.
சமீபத்தில் சல்மான்கான் கலந்துகொண்ட'பிக் பாஸ்' தயாரிப்பளர்களின் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சல்மான் சொர்க்கத்தையும், நரகத்தையும் சித்தரித்த விதம் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக முகமது பசிஹுதின் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
மதத்தை அவமதித்ததற்காக சல்மான் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் குற்றச் சட்டம் பிரிவு 295 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய ஹைதராபாத் நகரில் உள்ள பாலக்னுமா காவல்துறையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடவடிக்கைகள் எடுக்கும்முன் இந்த குற்றச்சாட்டு தொடர்பான சட்ட கருத்துகளையும் அறிய முயன்றுவருவதாக போலீஸ் கமிஷனர் அனுராக் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment